நெதர்லாந்து கொடுத்த வாழ்வு: அரைஇறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்
|20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
அடிலெய்டு,
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், அடிலெய்டில் நேற்று பிற்பகலில் நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்தை (குரூப்2) எதிர்கொண்டது.
நெதர்லாந்து அணி பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை சாய்த்ததன் மூலம் இந்த ஆட்டம் உயிரோட்டமானதாக மாறியது. அதாவது வெற்றி காணும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கிட்டும் என்ற பரபரப்புக்கு மத்தியில் 'டாஸ்' ஜெயித்த வங்காளதேசம் முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (54 ரன், 48 பந்து, 7 பவுண்டரி) தவிர மற்றவர்கள் யாரும் குறிப்பிடும்படி ஆடவில்லை. ஷன்டோ கூட 11 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷதப் கான் நழுவ விட்டதால் தான் அரைசதத்தை எடுக்க முடிந்தது. 20 ஓவர்களில் வங்காளதேசம் 8 விக்கெட்டுக்கு 127 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அபிப் ஹூசைன் 24 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
முன்னதாக வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசனின் (0) அவுட்டில் சர்ச்சை கிளம்பியது. ஷதப்கானின் சுழலில், சில அடி இறங்கி வந்து ஆடிய போது ஷகிப் அல்-ஹசன் எல்.பி.டபிள்யூ. ஆனார். உடனடியாக அவர் டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தார். ரீப்ளேயில் 'அல்ட்ரா எட்ஜ்' தொழில்நுட்பத்தில் பந்து பேட்டில் லேசாக உரசி அதன் பிறகே காலில் பட்டது போல் அடையாளம் தென்பட்டது. இன்னொரு கோணத்தில் பேட் பந்தில் படாமல் மைதானத்தில் மட்டும் பட்டது போன்றும் தெரிந்தது.
இறுதியில் பந்து பேட்டில் படவில்லை என்ற முடிவுக்கு வந்த 3-வது நடுவர் அதை எல்.பி.டபிள்யூ. என்று உறுதிப்படுத்தினார். இதனால் ஷகிப் அல்-ஹசன் மிகுந்த அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து 128 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாமும் (25 ரன்), துணை கேப்டன் முகமது ரிஸ்வானும் (32 ரன்) நிதானமாக விளையாடி நேர்த்தியான தொடக்கம் ஏற்படுத்தினர்.
மிடில் வரிசையில் முகமது ஹாரிஸ் (31 ரன், 18 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), ஷான் மசூத் (24 ரன்) ஆகியோர் வெற்றிப்பாதையை எளிதாக்கினர். பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை ருசித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.
ஏறக்குறைய வெளியேறும் கட்டத்தில் பரிதவித்த பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து கொடுத்த வாழ்வு மூலம் அரைஇறுதிக்கு வந்திருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் அந்த அணி அரைஇறுதியை எட்டுவது இது 6-வது முறையாகும். பாகிஸ்தான் அணி அரைஇறுதியில் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) நியூசிலாந்தை சந்திக்கிறது.