லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்; சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற மணிபால் டைகர்ஸ்
|இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய திசரா பெரேராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
சூரத்,
முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 'லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட்' தொடரின் 3வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிபால் டைகர்ஸ் அணி, குர்கீரத் சிங் தலைமையிலான டோயம் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மணிபால் டைகர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது. மணிபால் தரப்பில் திசரா பெரேரா 48 ரன் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் பிபுல் சர்மா, குர்கீரத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 145 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 144 ரன்களே எடுத்தது. இதன் மூலம் ஆட்டம் டை ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 1 விக்கெட்டை இழந்து 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மணிபால் அணி 3 பந்துகளில் 9 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய திசரா பெரேராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.