இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் முன்னணி வீரர் - இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு
|இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஜேக் லீக் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது இடது கால் முட்டியில் ஜேக் லீச் காயமடைந்தார். அதன் பின்னர் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜேக் லீச் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக மாற்று வீரரை இங்கிலாந்து இன்னும் அறிவிக்கவில்லை.