கடைசி டெஸ்ட்: 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 76/2
|இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற இன்னும் 289 ரன்கள் எடுக்க வேண்டி உள்ளது.
போர்ட் ஆப் ஸ்பெயின்,
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வருகிறது.முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிகவும் நிதானமாக ஆடினர். ஏதுவான பந்துகளை கூட அடிக்காமல் தடுப்பாட்டத்திலேயே தீவிரம் காட்டினர். இதனால் அவர்களின் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. அதிகபட்சமாக கேப்டன் பிராத்வெய்ட் 75 ரன்கள் எடுத்தார். 3-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 108 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. இடையே மழையால் ஒரு மணி நேரம் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது. ஆலிக் அதானேஸ் (37 ரன்), ஜாசன் ஹோல்டர் (11 ரன்) அவுட் ஆகாமல் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீசை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூம், முகேஷ் குமாரும் கதிகலங்க வைத்தனர். ஸ்டம்பை குறி வைத்து தாக்குதல் தொடுத்த சிராஜியின் புயல் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திண்டாடினர். அதானேசை (37 ரன், 115 பந்து, 3 பவுண்டரி) முகேஷ் குமார் காலி செய்ய, எஞ்சிய 4 விக்கெட்டுகளை சிராஜ் கபளீகரம் செய்தார்.
சிராஜ், ரோகித் கலக்கல்
வெறும் 7.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளையும் தாரை வார்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 115.4 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் அனது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 23.4 ஓவர்களில் 60 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். முகேஷ் குமார், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 183 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் 2-வது இன்னிங்சை கேப்டன் ரோகித் சர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடங்கினர். துரிதமாக ரன்வேட்டை நடத்தி எதிரணிக்கு இலக்கு நிர்ணயிக்கும் முனைப்புடன் இருவரும் மட்டையை அதிரடியாக சுழற்றினர். ரோகித் சர்மா சிக்சரும், பவுண்டரியுமாக சாத்தினார். இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ரோகித் சர்மா 35 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்டில் அவரது அதிவேக அரைசதம் இதுவாகும். அவர் 57 ரன்களில் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார்.
ஜெய்ஸ்வால் 38 ரன்களில் (30 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து மொத்தம் 301 ரன்கள் முன்னிலையில் இருந்த போது 2-வது முறையாக மழை பாதிப்பால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர் ஆட்டம் தொடங்கியபோது சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் இஷான் கிஷன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது சுப்மன் கில் 29 ரன்களும், இஷான் கிஷன் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் பிராத்வெய்ட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் பிராத்வெய்ட் 28 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய மெக்கன்சி (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
பின்னர் 4-ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது சந்தர் பால் 24 ரன்களும், பிளாக் வுட் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்னர். இந்திய அணியின் சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற இன்னும் 289 ரன்கள் தேவைப்படுகிறது. நாளை நடைபெற உள்ள கடைசிநாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி வாய்ப்பு உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.