இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
|இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆமதாபாத்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.
இதுவரை நடந்துள்ள 3 டெஸ்டுகளிலும் ஆடுகளம் முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு சொர்க்கமாக திகழ்ந்ததால் பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடினர். 3 போட்டியும் 3 நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது. இதில் இந்தூர் டெஸ்டுக்குரிய ஆடுகளத்தன்மை மோசம் என்று முத்திரை குத்திய ஐ.சி.சி. போட்டி நடுவர், 3 தகுதி இழப்பு புள்ளியும் விதித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியும். மாறாக தோல்வியை தழுவினால் இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். கடந்த டெஸ்டில் 109 மற்றும் 163 ரன்னில் சுருண்ட இந்திய அணி எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை பார்க்க அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்துக்கு பிரதமர் மோடி வந்தார். 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனியுடன் பிரதமர் மோடி கண்டுகளிக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா, ஆஸ்திரலியா அணி கேப்டன்களுக்கு இரு நாட்டு பிரதமர்களும் தொப்பியை எடுத்து கொடுத்தனர். தொடர்ந்து போட்டி நடக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் இரு நாட்டு பிரதமர்களும் வாகனத்தில் வலம் வந்தனர்.
இந்த நிலையில் இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பரத், அஸ்வின், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி, நாதன் லயன், குனேமேன்.