< Back
கிரிக்கெட்
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி தொடக்கம்
கிரிக்கெட்

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி தொடக்கம்

தினத்தந்தி
|
2 July 2022 5:45 AM IST

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.

காலே,

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 212 ரன்களும், ஆஸ்திரேலியா 321 ரன்களும் எடுத்தன. 109 ரன்கள் பின்தங்கிய நிலையில் 3-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, ஆஸ்திரேலியாவின் சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 22.5 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது.

அதிகபட்சமாக கேப்டன் திமுத் கருணாரத்னே 23 ரன்கள் எடுத்தார். மேத்யூஸ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்ததால் 2 -வது இன்னிங்சில் ஆடவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பதிலாக களம் இறங்கிய ஒஷாடா பெர்னாண்டோ 12 ரன்னில் கேட்ச் ஆனார். ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் நாதன் லயன் 4 விக்கெட்டும், மிட்செல் ஸ்வெப்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் டிராவிஸ் ஹெட்டும் தனது பங்குக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

பின்னர் 5 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 0.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் பவுண்டரி, சிக்சருடன் ஆட்டத்தை முடித்து வைத்தார். இலங்கை மண்ணில், ஆஸ்திரேலியா 2-வது பேட் செய்து வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு அங்கு பெற்றிருந்த 7 டெஸ்ட் வெற்றிகளும் முதல் பேட்டிங்கில் கிடைத்தவை ஆகும்.

இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு 12 புள்ளிகள் கிடைத்தது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.

மேலும் செய்திகள்