< Back
கிரிக்கெட்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி  இன்று தொடக்கம்
கிரிக்கெட்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
7 March 2024 6:00 AM IST

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று தொடங்குகிறது.

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. சரிவில் இருந்து மீண்டெழுந்து பதிலடி கொடுத்த இந்திய அணி விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சியில் நடந்த அடுத்த 3 டெஸ்டுகளில் வரிசையாக வெற்றி பெற்று தொடரையும் 3-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இந்திய அணி தொடரை ஏற்கனவே வசப்படுத்தி விட்டாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் இந்திய வீரர்கள் 'சம்பிரதாய மோதல்' என்று கருதாமல் முழு உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்கள் என்று நம்பலாம்.

தொடரை பறிகொடுத்து விட்ட இங்கிலாந்து வெற்றியோடு நிறைவு செய்வதில் தீவிரம் காட்டுகிறது. 'பாஸ்பால்' என்ற அவர்களின் அதிரடி யுக்தி கைகொடுக்கவில்லை. அந்த அணியை பொறுத்தவரை ஒவ்வொரு டெஸ்டிலும் ஏதாவது ஒரு வீரர் தான் பெரிய இன்னிங்சை ஆடுகிறார். ஆலி போப், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜோ ரூட் என்று வரிசைப்படுத்தலாம். ஆனால் ஒருசேர பங்களிப்பை அளிக்காததே அவர்களுக்கு பின்னடைவாக உள்ளது. கேப்டன் பென் ஸ்டோக்சின் பேட்டிங்கும் மெச்சும்படி இல்லை.

குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை கொண்ட தர்மசாலாவில் முதல் இரு நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக 10 டிகிரி அளவுக்கே இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய குளுகுளு சீசனை அனுபவிக்கும் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்கிறார்கள். அதுவே அவர்களுக்கு கூடுதல் உற்சாகம் தருகிறது. இது போன்ற சூழலில் வேகப்பந்து வீச்சு ஓரளவு எடுபட வாய்ப்பு இருக்கிறது. அதை கவனத்தில் கொண்டு அதிவேகமாக பந்து வீசக்கூடிய மார்க்வுட்டை மீண்டும் ஆடும் லெவனில் சேர்த்து உள்ளனர். ராபின்சன் கழற்றி விடப்பட்டுள்ளார். இந்த தகவலை தெரிவித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீருக்கு லேசான வயிற்று கோளாறு உள்ளது. அதனால் அவருக்கு இன்று (நேற்று) ஓய்வு அளிக்கப்பட்டது. போட்டிக்குள் தயாராகி விடுவார் என்று தெரிவித்தார்.

கடல்மட்டத்தில் இருந்து 1,457 மீட்டர் உயரத்தில் காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள தர்மசாலாவில் இதுவரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடந்துள்ளது. 2017-ம் ஆண்டில் நடந்த அந்த டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இருந்தது.

மூன்று வாரத்துக்கு முன்பு இங்கு நடந்த டெல்லி- இமாசலபிரதேசம் அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட்டில் சரிந்த 36 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே அள்ளினர். அதே ஆடுகளம் தான் தற்போதும் பயன்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், ரவீந்திர ஜடேஜா, சர்ப்ராஸ்கான், துருவ் ஜூரெல், அஸ்வின், குல்தீப் யாதவ் அல்லது ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், டாம் ஹார்ட்லீ, மார்க்வுட், சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்