< Back
கிரிக்கெட்
கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
23 Jun 2024 4:21 AM IST

தென்ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா அணி உள்ளது.

பெங்களூரு,

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 143 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. கடந்த ஆட்டத்தில் ஸ்மிர்தி மந்தனா (136 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (103) ஆகியோர் சதத்தின் உதவியுடன் இந்திய அணி குவித்த 325 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்து நெருக்கமாக வந்து தோல்வியை சந்தித்தது.

தென்ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் ஆட்டமிழக்காமல் 135 ரன்னும், மரிஜானே காப் 114 ரன்னும் சேர்த்து அசத்தினார்கள். வெற்றி உத்வேகத்தை தொடர்வதுடன் இந்திய அணி தொடரை முழுமையாக வெல்ல முனைப்பு காட்டும். அதேநேரத்தில் முதல் வெற்றியை பதிவு செய்ய தென்ஆப்பிரிக்க அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

மேலும் செய்திகள்