< Back
கிரிக்கெட்
கடைசி ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்..!!
கிரிக்கெட்

கடைசி ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்..!!

தினத்தந்தி
|
22 Dec 2023 12:16 AM IST

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

பார்ல்,

இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற புள்ளிகணக்கில் சமனில் இருந்தது.

இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கத்தில் ரஜத் படிதார் 22 ரன்களும் , சாய் சுதர்சன் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கே.எல். ராகுல் 21 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் வந்த சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார். நிலைத்து ஆடி ரன்கள் குவித்த அவர் அரைசதம் அடித்தார். மறுபுறம் திலக் வர்மா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 52 ரன்களில் வெளியேறினார்.

மறுபுறம் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளும், பர்கர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணியின் சார்பில் ஹென்ரிக்ஸ் மற்றும் ஜோர்ஜி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ஹென்ரிக்ஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வான் டர் டூசென் 2 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 36 ரன்களும் எடுத்து வெளியேறினர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோர்ஜி, தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கிளாசென் 21 ரன்களும், முல்டர் 1 ரன்னும், டேவிட் மில்லர் 10 ரன்னும், கேசவ் மகராஜ் 14 ரன்களும், வில்லியம்ஸ் 2 ரன்னும், ஹென்ரிக்ஸ் 18 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்பினர்.

இறுதியில் பர்கர் 1 ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 45.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்ர் சிங் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

மேலும் செய்திகள்