கடைசி ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெற்ற வங்காளதேசம்...தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து...!
|வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
சட்டோகிராம்,
வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்கள் முடிவில் இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்தும், ஆறுதல் வெற்றிக்காக வங்கதேசமும் களம் இறங்கின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி ஷாண்டோ, ஷகிப், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணி தரப்பில் ஷகிப் 75 ரன், முஷ்பிகுர் ரஹீம் 70 ரன், ஷாண்டோ 53 ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 247 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இங்கிலாந்து வீரர்கள் வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 38 ரன்னும், பிலிப் சால் 35 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 34 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேச அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியை தேடிக்கொண்டது.
வங்கதேச அணி தரப்பில் ஷகிப் 4 விக்கெட்டும், தைஜூல் இஸ்லாம், எபடாட் ஹோசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது.