கடைசி ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை எளிதில் சுருட்டி தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா...!
|இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 கணக்கில் முழுமையாக கைப்பற்றி உள்ளது.
மெல்போர்ன்,
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் 48 ஓவர்களாக மாற்றப்பட்டது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட் மற்றும் வார்னரின் அபார சதத்தால் 48 ஓவர்களில் 355 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஹெட் 152 ரன்களும், வார்னர் 106 ரன்களும் குவித்தனர். இதையடுத்து திருத்தப்பட்ட இலக்குடன் இங்கிலாந்து அணிக்கு 364 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் மலான் 2 ரன்னிலும், ராய் 33 ரன்னிலும், பில்லிங்ஸ் 7 ரன்னிலும், வின்ஸ் 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் புகுந்த கேப்டன் பட்லர் 1 ரன்னிலும், மொயீன் அலி 18 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் அந்த அணி 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 221 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தி உள்ளது.