< Back
கிரிக்கெட்
கடைசி 20 ஓவர் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

கடைசி 20 ஓவர் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
14 Dec 2023 4:46 AM IST

முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா ஆயத்தமாகி வருகிறது.

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஒவர் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் 'டாஸ்' கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

மழையால் பாதிக்கப்பட்ட முந்தைய ஆட்டத்தில் இந்தியா ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் ஆகியோரது அரைசதத்துடன் 180 ரன்கள் குவித்தது. பின்னர் மழையால் 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி 15 ஓவர்களில் 152 ரன்கள் எடுக்க வேண்டும் என்று மாற்றி அமைக்கப்பட்ட இலக்கை தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ரீஜா ஹென்ரிக்ஸ் 49 ரன்களும், கேப்டன் எய்டன் மார்க்ரம் 30 ரன்களும் விளாசினர்.

கடந்த ஆட்டத்தில் வெளியே உட்கார வைக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர், ரவி பிஷ்னோய் ஆகியோர் இன்றைய ஆட்டத்திற்கு திரும்ப வாய்ப்புள்ளது. மொத்தத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா ஆயத்தமாகிறது.

வெற்றி உற்சாகத்துடன் களம் காணும் தென்ஆப்பிரிக்கா சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் தொடரை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் மார்க்ரம், ஹென்ரிக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஜீ அசத்தினர். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் மார்கோ யான்சென், கோட்ஜீ ஆகியோர் டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கு உள்ளூர் முதல்தர போட்டிக்கு செல்வதால் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார்கள். இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை 5 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி அதில் 3-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கிலும் மழை குறுக்கிடலாம். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் மழை பெய்வதற்கு 25 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, முகேஷ்குமார், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அர்ஷ்தீப்சிங்.

தென்ஆப்பிரிக்கா: ரீஜா ஹென்ரிக்ஸ், மேத்யூ பிரீட்ேக, மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டோனோவன் பெரீரா, பெலுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, லிசாத் வில்லியம்ஸ், நன்ரே பர்கர் அல்லது ஒட்னில் பாட்மேன்.

மேலும் செய்திகள்