லங்கா பிரீமியர் லீக்: தொடக்க ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி ஜாப்னா கிங்ஸ் வெற்றி...!
|4வது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - ஜாப்னா கிங்ஸ் அணிகள் மோதின.
கொழும்பு,
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்படுவதை போன்று உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் டி20 தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுகிறது. அதன்படி 4வது லங்கா பிரீமியர் லீக் தொடர் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - ஜாப்னா கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ஜாப்னா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் மதுஷ்கா 12 ரன், குர்பாஸ் 21 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். அடுத்து களம் இறங்கிய அசலங்கா 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து டவ்ஹித் ஹ்ரிடோய், பெரேரா ஜோடி சேர்ந்தனர்.
இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹ்ரிடோய் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் ஜாப்னா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 174 ரன்கள் வெற்றி இலக்குடன் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய நிரோஷன் டிக்வெல்லா ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
அதில் பாபர் ஆசம் 7 ரன், பதும் நிசாங்கா 1 ரன், பெர்னாண்டோ 17 ரன், முகமது நவாஸ் 3 ரன், யசோதா லங்கா 11 ரன், கருணாரத்னே 23 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதற்கிடையில் நிலைத்து நின்று ஆடிய டிக்வெல்லா அரைசதம் அடித்த நிலையில் 58 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் கொழும்பு அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஜாப்னா அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாப்னா அணி தரப்பில் ஹார்டஸ் வில்ஜோன் 3 விக்கெட், விஜயகாந்த் வியாஸ்காந்த், தில்ஷன் மதுஷங்க தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.