< Back
கிரிக்கெட்
வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கம்: கவாஸ்கர் சாடல்
கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கம்: கவாஸ்கர் சாடல்

தினத்தந்தி
|
23 Dec 2022 4:39 AM IST

ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரு வீரரை அடுத்த டெஸ்டில் இருந்து நீக்கியதை என்னால் நம்ப முடியவில்லை என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

மும்பை,

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தியதுடன், 40 ரன்னும் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 2-வது டெஸ்டில் ஆச்சரியப்படும் வகையில் கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உனட்கட் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து டாஸ் போடப்படும் போது பேசிய இந்திய பொறுப்பு கேப்டன் லோகேஷ் ராகுல், 'இந்த ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஆடுகளத்தில் நிறைய புற்கள் உள்ளன. அதே சமயம் இந்த மாதிரி தான் இருக்கும் என்று எந்த எதிர்பார்ப்பு இல்லாததால் ஏமாற்றமடையவில்லை. ஆடுகளம் விஷயத்தில் நிபுணர்கள், பயிற்சியாளர்கள், சீனியர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெறுகிறேன்.

குல்தீப் யாதவ் இடத்திற்கு ஜெய்தேவ் உனட்கட் வருகிறார். குல்தீப்பை நீக்கியது கடினமான முடிவு தான். ஆனால் இங்குள்ள சூழலில் அஸ்வின், அக்ஷர் பட்டேல் ஆகிய இருவரும் சுழற்பந்து வீச்சுக்கு போதும் என்று நினைக்கிறோம். எல்லாவிதமான விஷயங்களையும் கவனத்தில் கொண்டு உனட்கட் அழைக்கப்பட்டுள்ளார்' என்றார்.

இந்த முடிவுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ள இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், 'ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரு வீரரை அடுத்த டெஸ்டில் இருந்து நீக்கியதை என்னால் நம்ப முடியவில்லை. கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி எனது ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் நம்ப முடியவில்லை என்ற மென்மையான வார்த்தையோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அணியில் உள்ள எஞ்சிய இரு சுழற்பந்து வீச்சாளர்களில் (அஸ்வின் மற்றும் அக்ஷர் பட்டேல்) ஒருவரை நீக்கி இருக்கலாம். 20 விக்கெட்டுகளில் இருந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒருவரை எப்படி நீக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த டெஸ்டில் குல்தீப் யாதவ் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்