சர்வதேச டி20 கிரிக்கெட்; குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் - சாஹல் சாதனையை முறியடித்த குல்தீப்...!
|வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கயானா,
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, சூர்யகுமார் யாதவ் 83 ரன், திலக் வர்மா 49 ரன் (நாட் அவுட்) ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் யுஸ்வேந்திர சாஹலின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் சாஹல் 34 போட்டிகளில் ஆடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தற்போது குல்தீப் யாதவ் 30 ஆட்டங்களில் ஆடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.