கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர் விளாசிய கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்குக்கு ஐ.சி.சி. பாராட்டு
|5 பந்தில் 5 சிக்சர்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்ததுடன், கிரிக்கெட் உலகை திரும்பிப்பார்க்கவைத்த ரிக்கு சிங்கை ஐசிசி பாராட்டியுள்ளது.
ஆமதாபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த குஜராத்துக்கு எதிரானஆட்டத்தில் 205 ரன்கள் இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது. கொல்கத்தா இளம் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் (48 ரன், நாட்-அவுட்) கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர் விரட்டி நம்ப முடியாத வெற்றியை தேடித்தந்ததுடன் ஒரே இரவில் ஹீரோவாக உயர்ந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ஏழ்மையான குடும்பத்தின் பின்னணியில் இருந்து கிரிக்கெட் களம் நுழைந்த 25 வயதான ரிங்கு சிங்கை ரூ.55 லட்சத்திற்கு கொல்கத்தா அணி ஏலத்தில் வாங்கி இருந்தது. அவரது தந்தை கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்து வந்தார். ரிங்கு சிங் ஐ.பி.எல்.-ல் கால்பதித்த பிறகே அவரது குடும்பத்தின் கடன்சுமை, கஷ்டம் நீங்கியது.
2018-ம் ஆண்டில் ரூ.80 லட்சத்திற்கு ஏலம் போன போது வீடு கட்டியதுடன், தனது தந்தைக்கு காரும் வாங்கிக் கொடுத்தார். ஆனாலும் பழசை மறக்காத ரிங்கு சிங், தான் மைதானத்தில் அடிக்கும் ஒவ்வொரு பந்தையும், தனக்காக தியாகம் செய்தவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று வெற்றிக்கு பிறகு உருக்கமாக கூறினார்.
இதற்கிடையே ரிங்கு சிங்குக்கு பாராட்டுகள் குவிகிறது. 'இலக்கை துரத்தும் இன்னிங்சில், அடித்து நொறுக்கப்பட்ட மிகச்சிறந்த கடைசி ஓவர்களில் இதுவும் ஒன்று' முன்னாள் வீரர் ஷேவாக் கூறினார். 'இது போன்ற ஒரு இன்னிங்சை பார்த்ததில்லை' என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் வியந்துள்ளார். 'ரிங்கு சிங்கின் அதிரடி ஷாட்டுகள் சிறப்பு வாய்ந்தவை. இறுதிகட்ட தருணங்களை ரசித்து பார்த்தேன். கடைசி பந்து வரை ஆட்டத்தின் முடிவை கணிக்க முடியாது என்பதை நமக்கு கற்றுத்தந்த ஆட்டம் இது' என்று தெண்டுல்கர் சிலிர்த்தார்.
ரிங்கு சிங்குக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) புகழாரம் சூட்டியுள்ளது. அன்று கார்லஸ் பிராத்வெயிட்.... இன்று ரிங்கு சிங்.... என்று குறிப்பிட்டு இருவரது புகைப்படத்தையும் பகிர்ந்து இவர்களது பெயர் நிலைத்து நிற்கும் என்று ஐ.சி.சி. கூறியுள்ளது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி சுற்றில் வெஸ்ட் இண்டீசின் கார்லஸ் பிராத்வெய்ட் கடைசி ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். அதைத் தான் ஐ.சி.சி. இவ்வாறு ஒப்பிட்டுள்ளது