< Back
கிரிக்கெட்
ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் அய்யர் அதிரடி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கொல்கத்தா அணி

Image Courtacy: IndianPremierLeagueTwitter

கிரிக்கெட்

ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் அய்யர் அதிரடி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கொல்கத்தா அணி

தினத்தந்தி
|
21 May 2024 10:49 PM IST

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.

ஆமதாபாத்,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஆமதாபாத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. 'டாஸ்' ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் ஷர்மாவும் ஐதராபாத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். அபாயகரமான ஜோடியாக வர்ணிக்கப்படும் இவர்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்திலேயே 'செக்' வைத்தனர். டிராவிஸ் ஹெட் (0), மிட்செல் ஸ்டார்க்கின் பந்தில் போல்டு ஆனார். அபிஷேக் ஷர்மாவை (3 ரன்) வைபவ் அரோரா காலி செய்தார். கொஞ்சம் ஈரப்பதமாக காணப்பட்ட ஆடுகளத்தை கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர்கள் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து துல்லியமாக பந்து வீசி அச்சுறுத்திய மிட்செல் ஸ்டார்க், நிதிஷ்குமார் ரெட்டி (9 ரன்), ஷபாஸ் அகமது (0) ஆகியோரது விக்கெட்டையும் கபளீகரம் செய்தார். இதனால் ஐதராபாத் அணி 39 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (5 ஓவர்) பறிகொடுத்து ஊசலாடியது.

இந்த நெருக்கடியான சூழலில் 5-வது விக்கெட்டுக்கு ராகுல் திரிபாதியும், விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசெனும் கைகோர்த்து அணியை சிக்கலில் இருந்து மீட்டனர். அது மட்டுமின்றி ஏதுவான பந்துகளை விரட்டவும் தவறவில்லை. சுனில் நரினின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓடவிட்டனர். ரன்ரேட் 9-க்கு குறையாமல் நகர்ந்தது.

அணியின் ஸ்கோர் 101 ஆக உயர்ந்த போது கிளாசென் (32 ரன், 21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) பந்தை தூக்கியடித்து எல்லைக்கோடு அருகே பிடிபட்டார். மறுபக்கம் அரைசதத்தை கடந்த திரிபாதி நிலைத்து நின்று ஆடியதால் எப்படியும் 200-ஐ நெருங்குவார்கள் என்றே தோன்றியது.

ஆனால் 14-வது ஓவரில் திரிபாதி (55 ரன், 35 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆகிப் போனார். அது தான் ஆட்டத்தின் திருப்புமுனை. அதன் பிறகு விக்கெட்டும், ரன்வேகமும் ஒரேயடியாக சரிந்தது. அப்துல் சமத் (16 ரன்), இம்பேக்ட் பேட்ஸ்மேன் சன்விர் சிங் (0), புவனேஷ்வர்குமார் (0) அடுத்தடுத்து நடையை கட்டினர். இதற்கு மத்தியில் கடைசி கட்டத்தில் கேப்டன் கம்மின்ஸ் (30 ரன், 24 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) சிறிது நேரம் அதிரடி காட்டியதால் ஒருவழியாக ஸ்கோர் 150-ஐ கடந்தது.

ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் 159 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் 160 ரன் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி ஆடியது. விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாசும் (23 ரன்), சுனில் நரினும் (21 ரன்) ஓரளவு சிறந்த தொடக்கம் தந்தனர்.

இதைத்தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் அய்யரும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் இணைந்து அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். சிரமமின்றி அடித்து நொறுக்கிய இந்த கூட்டணியை ஐதராபாத் பவுலர்களால் உடைக்க முடியவில்லை. இறுதியில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் டிராவிஸ் ஹெட்டின் ஒரே ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார்.

இறுதிப்போட்டியில் கொல்கத்தா

கொல்கத்தா அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெங்கடேஷ் அய்யர் 51 ரன்னுடனும் (28 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்னுடனும் (24 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தனர். மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கொல்கத்தா அணி இறுதிசுற்றை எட்டுவது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2012, 2014, 2021-ம் ஆண்டுகளிலும் இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. மகுடத்துக்கான இறுதிப்போட்டி வருகிற 26-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

ஐதராபாத் அணிக்கு இன்னொரு வாய்ப்பு

தோல்வி அடைந்தாலும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன், அந்த அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் 24-ந்தேதி மோத உள்ளது.

மேலும் செய்திகள்