< Back
கிரிக்கெட்
பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி கொல்கத்தா அணி 5-வது வெற்றி
கிரிக்கெட்

பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி கொல்கத்தா அணி 5-வது வெற்றி

தினத்தந்தி
|
8 May 2023 10:43 PM GMT

முந்தைய லீக்கில் பஞ்சாப்பிடம் கண்ட தோல்விக்கும் கொல்கத்தா அணி பழிதீர்த்தது.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் பஞ்சாப்பை வீழ்த்தி கொல்கத்தா அணி 5-வது வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் களம் கண்டனர். முதல் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசிய பிரப்சிம்ரன் சிங் (12 ரன்) அடுத்த ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா பந்து வீச்சை ஓங்கி அடித்தார். சரியாக படாததால் 'எட்ஜ்' ஆன பந்தை விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாஸ் குதித்தபடி ஒற்றைகையில் தட்டிவிட்டு அருமையாக பிடித்தார்.

ஷிகர் தவான் அரைசதம்

அடுத்து வந்த பானுகா ராஜபக்சே ரன் எதுவும் எடுக்காமல் ஹர்ஷித் ராணா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குர்பாஸ்சிடம் கேட்ச் கொடுத்தும், 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டிய லியாம் லிவிங்ஸ்டன் 15 ரன்னில் (9 பந்து, 3 பவுண்டரி) வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையிலும் ஆட்டம் இழந்தனர். பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) அந்த அணி 3 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஜிதேஷ் ஷர்மா (21 ரன்கள்) வருண் சக்ரவர்த்தி சுழலில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்ட ஷிகர் தவான், சுனில் நரின் பந்து வீச்சில் சிக்சர் தூக்கியதுடன் 41 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஐ.பி.எல். போட்டி தொடரில் அவர் அடித்த 50-வது அரைசதம் இதுவாகும். அடுத்த ஓவரில் ஷிகர் தவான் 57 ரன்னில் (47 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஹர்ஷித் ராணா பந்து வீச்சில் பவுண்டரி எல்லையில் வைபவ் அரோராவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சாம் கர்ரன் (4 ரன்), ரிஷி தவான் (19 ரன்) ஆகியோரும் நிலைக்கவில்லை.

180 ரன் இலக்கு

கடைசி 2 ஓவர்களில் தமிழக வீரர் ஷாருக்கான், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் அதிரடி காட்டி வேகமாக ரன் சேர்த்தனர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 21 ரன்னுடனும் (8 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹர்பிரீத் பிரார் 17 ரன்னுடனும் (9 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டும், சுயாஷ் ஷர்மா, நிதிஷ் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 180 ரன் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாசன் ராய், ரமனுல்லா குர்பாஸ் ஆகியோர் அடித்து ஆடினர். ரமனுல்லா குர்பாஸ் 15 ரன்னில் (12 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) நாதன் எலிஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்த சில ஓவர்களில் ஜாசன் ராய் 38 ரன்னில் (24 பந்து, 8 பவுண்டரி) ஹர்பிரீத் பிரார் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் நிதிஷ் ராணாவுடன் இணைந்த வெங்கடேஷ் அய்யர் 11 ரன்னில் ராகுல் சாஹர் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். பொறுப்புடன் ஆடி 37 பந்துகளில் அரைசதத்தை எட்டிய நிதிஷ் ராணா (51 ரன்கள், 38 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்த பந்திலேயே ராகுல் சாஹர் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கொல்கத்தா திரில் வெற்றி

அடுத்து ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செலுடன் கைகோர்த்தார். அதிரடி ஆட்டக்காரர்களாக இருவரும் வேகமாக மட்டையை சுழற்றி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் வந்தது. 5-வது பந்தில் ஆந்த்ரே ரஸ்செல் (42 ரன்கள், 23 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன் தேவையாக இருந்த நிலையில் ரிங்கு சிங் (21 ரன்கள், 10 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) பவுண்டரி விளாசி தித்திப்பளித்தார்.

20 ஓவர்களில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், நாதன் எலிஸ், ஹர்பிரீத் பிரார் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

11-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி 5-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிப்பதுடன் முந்தைய லீக்கில் பஞ்சாப்பிடம் கண்ட தோல்விக்கும் பழிதீர்த்தது. பஞ்சாப் அணி சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

மேலும் செய்திகள்