டெஸ்ட் தொடரில் இருந்து கோலி விலகல்; ஜெய்ஷா கூறியது என்ன...?
|விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார்.
ராஜ்கோட்,
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில், அதிரடி பேட்ஸ்மேனான விராட் கோலி விளையாடவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகினார். இதற்கு தனிப்பட்ட காரணங்களை அவர் குறிப்பிட்டார். ஆனால், மொத்தமுள்ள 5 போட்டிகள் கொண்ட தொடர் முழுவதும் அவர் விளையாடமாட்டார் என பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், குஜராத்தின் ராஜ்கோட் நகரில் சவுராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா செய்தியாளர்கள் சந்திப்பில், டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடாதது பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
அவர் பேசும்போது, 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வில் முதன்முறையாக, ஒருவர் தனிப்பட்ட விசயத்திற்காக விடுமுறை கேட்கிறார் என்றால், அது அவருடைய உரிமை.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கோலி, எந்தவித காரணமும் இன்றி விடுமுறை எடுக்கும் யாரோ ஒரு நபர் கிடையாது. நம்முடைய வீரரை நாம் நம்ப வேண்டும். ஆதரவும் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
கடைசியாக ஜனவரி மாதத்தில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டி தொடரில், இந்திய அணியில் இடம்பெற்று கோலி விளையாடினார்.