டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கோலி கண்டிப்பாக இடம் பிடிப்பார் - ஸ்டூவர்ட் பிராட்
|டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.
லண்டன்,
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், இந்த உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் இந்த செய்தி உண்மையாக இருக்க முடியாது என்றும், அவர் கண்டிப்பாக அந்த உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புவதாகவும் ஸ்டூவர் பிராட் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
இந்த செய்தி உண்மையாக இருக்க முடியாது. விளையாட்டை ரசிகர்களின் பார்வையில் வளர்ப்பதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ஐசிசி வைத்துள்ளது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் விராட் கோலி உலகில் எந்த வீரரையும் விட மகத்தானவர். எனவே அவர் கண்டிப்பாக அந்த உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.