< Back
கிரிக்கெட்
அடுத்த டி20 உலகக்கோப்பையில் கோலி விளையாடலாம், ஆனால் ரோகித் ஆட மாட்டார் - இந்திய முன்னாள் வீரர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

அடுத்த டி20 உலகக்கோப்பையில் கோலி விளையாடலாம், ஆனால் ரோகித் ஆட மாட்டார் - இந்திய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
4 Feb 2023 2:28 PM IST

அடுத்த டி20 உலகக்கோப்பையில் கோலி விளையாடலாம், ரோகித் கண்டிப்பாக விளையாட மாட்டார் என இந்திய முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா. சமீபகாலமாக இவர்கள் இருவருக்கும் 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் இளம் வீரர்களை உருவாக்கும் வகையில் இவர்களை ஓரம் கட்ட கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் விராட் கோலி விளையாட வாய்ப்பு இருக்கு ஆனால் ரோகித் சர்மா விளையாடமாட்டார் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த இரு பெரும் வீரர்களை இனி வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் காணலாம்.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற உள்ளது. எதிர்காலத்தை பாருங்கள், டி20 போட்டிகள் இள, வீரர்களுக்கு உள்ளது. அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் ஆடுவார் என நான் நினைக்கவில்லை. அடுத்த டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி ஆடலாம், ஆனால் ரோகித் கண்டிப்பாக ஆட மாட்டார். அவருக்கு தற்போது 36 வயதாகிறது.

இவ்வாறு வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை போட்டி கடைசியாக கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

அடுத்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2024-ம் ஆண்டு அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதற்காக ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் அணியை உருவாக்கும் முயற்சியில் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாகவே ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு 20 ஓவரில் ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது.

ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருக்கிறார். 20 ஓவருக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக உள்ளார். 20 ஓவர் போட்டியில் விராட் கோலி 4008 ரன்னும் (114 போட்டி), ரோகித் சர்மா 3853 ரன்னும் (148 ஆட்டம்) எடுத்து சர்வதேச அளவில் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

மேலும் செய்திகள்