< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.2025: லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை சந்தித்த கே.எல்.ராகுல்
கிரிக்கெட்

ஐ.பி.எல்.2025: லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை சந்தித்த கே.எல்.ராகுல்

தினத்தந்தி
|
26 Aug 2024 7:59 PM IST

ஐ.பி.எல். மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

கொல்கத்தா,

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர்.

அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டது என இப்போதே அடுத்த சீசன் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.

இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனான கே.எல். ராகுல், அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவை இன்று நேரில் சந்தித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள கோயங்காவின் அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இதில் மெகா ஏலத்திற்கு முன் தக்கவைக்கப்படும் வீரர்கள், அணியின் நிலைப்பாடு மற்றும் ஜாகீர் கானை அணியின் ஆலோசகராக கொண்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது சஞ்சீவ் கோயங்கா உடனான மனக்கசப்பு காரணமாக கே.எல்.ராகுல் லக்னோ அணியிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த சந்திப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்