தோனியின் ஜெர்சி எண்ணை பேட்டில் செதுக்கி களத்தில் இறங்கிய கிரண் நேவ்கிர்.. வைரலாகும் புகைப்படம்
|உபி வாரியர்ஸ் அணி வீராங்கனை கிரன் நேவ்கிர் பேட்டில் தோனியின் ஜெர்ஸி நம்பருடன் எம்.எஸ்.டி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மும்பை,
பெண்கள் பிரீமியர் லீக் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் உபி வாரியர்ஸ் அணி வீராங்கனை கிரன் நேவ்கிர் அரைசதத்தை கடந்து 53 (43) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அவர் தனது பேட்டில் தோனியின் பெயரைக் குறிப்பிட்டு இருந்தார். அவரது பேட்டில் தோனியின் ஜெர்ஸி நம்பருடன் எம்.எஸ்.டி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. தான் ஒரு தீவிர தோனி ரசிகை என்றும், தோனியை முன்மாதிரியாகக் கருதி தான் கிரிக்கெட் ஆடுவதாகவும் ஏற்கனவே கிரன் நேவ்கிர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.