உலகக் கோப்பையில் கேன் வில்லியம்சன் களமிறங்குவார்.! நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவிப்பு
|இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சனும் இடம் பெறுவார் என நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
வெலிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த மார்ச் 31-ந்தேதி ஆமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் எல்லைக்கோடு அருகே பந்தை துள்ளி குதித்து தடுத்தபோது கீழே விழுந்ததில் வலது முழங்காலில் காயமடைந்தார்.
காயத்தன்மை தீவிரமாக இருந்ததால் உடனடியாக தாயகம் திரும்பிய அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. காயத்தில் இருந்து குணமடைந்து வரும் அவர் மீண்டும் பயிற்சியையும் தொடங்கி விட்டார். ஆனாலும் அக்டோபர் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கும் உலகக் கோப்பை போட்டியில் அவர் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதற்கிடையில், தான் உலகக்கோப்பையில் ஆடுவது சந்தேகம் தான் என வில்லியம்சன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு உலகக் கோப்பை அணிக்கு திரும்புவது என்பது உண்மையிலே கடினமான இலக்கு. என்றாலும் உலகக் கோப்பை போட்டியில் ஆட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உந்துசக்தியாக இருக்கிறது. தொடர்ந்து முன்னேற்றத்தை காண விரும்புகிறேன்' என்றார்.
இந்த நிலையில், காயத்தால் 6 மாதமாக ஓய்வில் இருந்த கேன் வில்லியம்சன், உலகக் கோப்பையில் களமிறங்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சனும் இடம் பெறுவார் என நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது. உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி செப்டம்பர் 11ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.