பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும் கம்ரான் அக்மல்
|வங்காளதேசம் - பாகிஸ்தான் இடையே நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கராச்சி,
வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி ராவல்பிண்டியிலும், 2வது டெஸ்ட் போட்டி வரும் 30ம் தேதி கராச்சியிலும் தொடங்குகிறது.
இதில் கராச்சியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த முடிவு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானை நகைச்சுவையாக காட்சிப்படுத்துவதாக முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தங்கள் நாட்டு வாரியத்தை விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
"2வது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற உள்ளது. அங்கே சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாரவதற்காக புதுப்பிக்கும் வேலைகள் நடைபெறுகிறது என்று நினைக்கிறேன். ஆனால் அதற்காக பாகிஸ்தானில் ரசிகர்கள் இல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறப் போகும் நகைச்சுவை அரங்கேற உள்ளது. நம்மிடம் 2 - 3 மைதானங்கள் கூட தயாராக இல்லை. நம்மிடம் பைசலாபாத் நகரில் ஒரு மைதானம் உள்ளது. அங்கே வரலாற்றில் நிறைய போட்டிகள் நடைபெற்றுள்ளன. அது போக முல்தான் நகரில் நல்ல மைதானம் இருக்கிறது. எனவே 2வது போட்டியை இந்த 2 மைதானங்களில் ஏதேனும் ஒன்றில் நடத்தி இருந்தால் ரசிகர்கள் வந்திருப்பார்கள்.
ஆனால் அதை செய்யாத நீங்கள் சர்வதேச அரங்கில் நம்முடைய கிரிக்கெட்டை நகைச்சுவையாக மாற்றியுள்ளீர்கள். இது போன்ற விஷயங்கள் நடக்கக் கூடாது. இது போன்ற விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இது போன்ற முடிவுகளை நீங்கள் எடுத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் நகைச்சுவையாக மாறிவிடும். இது போன்ற விஷயங்களில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும். யார் இந்த முடிவை எடுத்தார்கள் என்பது பற்றி பாகிஸ்தான் வாரிய தலைவர் கேட்க வேண்டும். ஏனெனில் மைதானத்தில் ரசிகர்கள் இல்லை என்றால் அதில் பார்ப்பதற்கு என்ன இருக்கும்? ஏற்கனவே நமது ரசிகர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. இப்படியே போனால் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளை பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள்" என்று கூறினார்.