காமிந்து மெண்டிஸ் சதம்... முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 302/7
|இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்கியது.
காலே,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்கியது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னே ஆகியோர் களம் இறங்கினர். இதில் கருணாரத்னே 2 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து தினேஷ் சண்டிமால் களம் புகுந்தார். சண்டிமால் - நிசாங்கா இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் நிசாங்கா 27 ரன்னிலும், சண்டிமால் 30 ரன்னிலும் அடுத்து வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும், தனஞ்செயா டி சில்வா 11 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து காமிந்து மெண்டிஸ் மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் அபாரமாக ஆடிய காமிந்து மெண்டிஸ் சதம் அடித்து அசத்தினார்.
அவருடன் சேர்ந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்த குசல் மெண்டிஸ் அரைசதம் அடித்த நிலையில் (50 ரன்) அவுட் ஆனார். தொடர்ந்து ரமேஷ் மெண்டிஸ் களம் இறங்கினார். மறுமுனையில் சதம் அடித்து அசத்திய காமிந்து மெண்டிஸ் 114 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 302 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை தரப்பில் காமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் எடுத்தார். ரமேஷ் மெண்டிஸ் 14 ரன்னுடனும், பிரபாத் ஜெயசூர்யா ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 3 விக்கெட், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட், டிம் சவுதி, அஜாஸ் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.