உலகக் கோப்பை போட்டிக்குள் உடல் தகுதியை எட்ட வில்லியம்சன் முயற்சி
|உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக மீண்டும் வலைப்பயிற்சிக்கு திரும்புவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்று கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
வெலிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பவுண்டரி எல்லையில் பந்தை துள்ளிகுதித்து தடுத்த போது கீழே விழுந்து முழங்காலில் காயமடைந்து விலகினார். காயத்துக்கு ஆபரேஷன் செய்து இருக்கும் வில்லியம்சன் இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஆடுவது மிகவும் கடினம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனாலும் வில்லியம்சன் உலகக் கோப்பை நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை. அவர் நேற்று அளித்த பேட்டியில், 'நான் இதற்கு முன்பு இதுபோல் நீண்ட காலம் விளையாட முடியாத அளவுக்கு காயத்தை சந்தித்தது கிடையாது. காயம் குறித்து மற்றவர்களிடம் பேசும் போது குணமடைய நீண்ட நாட்கள் பிடிக்கும் என்று சொல்கிறார்கள். இது குறித்து நீங்கள் அதிகம் சிந்தித்தால் கவலை தான் மிஞ்சும்.
காயத்தில் இருந்து மீளுவதற்கான பயிற்சியின் தொடக்க கட்டத்தில் தான் இருக்கிறேன். இந்த தருணத்தில் ஒவ்வொரு வாரமாக திட்டமிட்டு எனது பயிற்சிகளை தீவிரமாக செய்கிறேன். அதில் நல்ல முன்னேற்றம் கிடைத்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக மீண்டும் வலைப்பயிற்சிக்கு திரும்புவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்' என்றார்.