< Back
கிரிக்கெட்
ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணியை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா
கிரிக்கெட்

ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணியை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா

தினத்தந்தி
|
8 Feb 2024 10:38 PM IST

பரபரப்பான அரையிறுதியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பெனோனி,

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இதையடுத்து கடந்த 6ம் தேதி நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இறுதிப்போட்டியில் விளையாடும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் தொடரின் 2வது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.

பெனோனியில் தொடங்கிய அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக அசான் அவேஸ் 52 ரன்களும், அராபத் மின்ஹாஸ் 52 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய டாம் ஸ்டாகர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 49.1 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹேரி டிக்சன் 50 ரன்களும், ஒலிவர் பீக் 49 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அலி ராசா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்படி 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்படி வரும் 11ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

மேலும் செய்திகள்