ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா, நேபாளத்துடன் இன்று மோதல்
|15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
புளோம்பாண்டீன்,
15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1 பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட ஒரு பிரிவில் உள்ள இரண்டு அணிகளுக்கு எதிராக மட்டும் ஆடும் வகையில் அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.
சூப்பர் சிக்ஸ் சுற்றில் முதலாவது ஆட்டத்தில் 214 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணிக்கு நேபாளத்தை புளோம்பாண்டீனில் சந்திக்கிறது.
நடப்பு சாம்பியன் இந்திய அணி லீக் சுற்று உள்பட தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்டு வரும் இந்தியா, நேபாளத்தையும் வீழ்த்தி அரையிறுதியை எட்டுவதில் தீவிரம் காட்டுகிறது.
அதேவேளையில் நேபாள அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக) வெற்றி பெற்றது. மற்ற 3 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி தடுமாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.