< Back
கிரிக்கெட்
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: நேபாளத்தை வீழ்த்திய இந்தியா...அரையிறுதிக்கும் தகுதி

image courtesy; twitter/ @BCCI

கிரிக்கெட்

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: நேபாளத்தை வீழ்த்திய இந்தியா...அரையிறுதிக்கும் தகுதி

தினத்தந்தி
|
2 Feb 2024 4:22 PM GMT

நேபாளத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் 2 பேர் சதமடித்து அசத்தினர்.

புளோம்பாண்டீன்,

15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறின.

சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தன. இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா இடம் பெற்றிருந்தது.

சூப்பர் சிக்ஸ் சுற்றில் முதலாவது ஆட்டத்தில் 214 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இன்று நேபாளத்துடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் 2 பேர் சதமடித்து அசத்தினர். இந்திய அணியில் அதிகபட்சமாக சச்சின் தாஸ் 116 ரன்களும், உதய் சாஹரன் 100 ரன்களும் குவித்து அசத்தினர். நேபாள அணி தரப்பில் குல்சன் ஜா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதனையடுத்து 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாளம், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியால் 50 ஓவர்கள் வரை தாக்குப்பிடிக்க முடிந்ததே தவிர இலக்கை நெருங்க முடியவில்லை. முடிவில் நேபாளம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதன் மூலம் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நேபாளம் அணி தரப்பில் அதிகபட்சமாக தேவ் கனல் 33 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சவுமி பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்