ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு
|ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
துபாய்,
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தானும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியினர் இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். அந்த அணியில் ஜம்ஷித் சத்ரன், முகமது யூனுஸ் மற்றும் நுமன் ஷா தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் அடித்தது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் பஷீர் அகமது ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி மற்றும் அர்ஷின் குல்கர்னி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஜம்ஷித் சத்ரன் 43 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.