ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அதிர்ச்சி தோல்வி..!
|ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நாளை யுஏஇ - வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.
துபாய்,
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதையடுத்து இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
இதில் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்துடன் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் வங்காளதேச பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினர்.
42.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 188 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முருகன் அபிஷேக் 62 ரன்களும், முஷீர் கான் 50 ரன்களும் அடித்தனர். வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக மருப் மிருதா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த தொடரில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் -யுஏஇ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய யுஏஇ அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 193 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி யுஏஇ-யின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து பாகிஸ்தான் அணியால் 182 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 11 ரன் வித்தியாசத்தில் யுஏஇ அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் யுஏஇ - வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.