< Back
கிரிக்கெட்
ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

image courtesy: BCCI Women twitter

கிரிக்கெட்

ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

தினத்தந்தி
|
30 Jan 2023 3:43 AM IST

ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்செப்ஸ்ட்ரூம்,

பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்திய அணியினருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ந்தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது.

இதில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தகிடுதத்தம் போட்டனர். 17.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 68 ரன்னில் சுருண்டது.

நியாம் ஹாலன்ட் (10 ரன்), ரியானா மெக்டொனால்டு கே (19 ரன்), அலெக்சா ஸ்டோனவுஸ் (11 ரன்), சோபியா ஸ்மேல் (11 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் 4 ரன்னில் கேட்ச் ஆனார். இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் திதாஸ் சாது 4 ஓவர்களில் 6 ரன் மட்டுமே வழங்கி 2 விக்கெட் சாய்த்தார். பார்ஷவி சோப்ரா, அர்ச்சனா தேவி தலா 2 விக்கெட்டும், மன்னட் காஷ்யப், ஷபாலி வர்மா, சோனம் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகள் கேப்டன் ஷபாலி வர்மா (15 ரன்), சுவேதா செராவத் (5 ரன்) ஏமாற்றம் அளித்தாலும் பின்னால் வந்த வீராங்கனைகள் சிரமமின்றி இலக்கை எட்ட வைத்தனர். திரிஷா 24 ரன்னில் போல்டானார்.

இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. சவும்யா திவாரி 24 ரன்னுடனும் (37 பந்து, 3பவுண்டரி) ஹிரிஷிதா பாசு ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்தியாவின் திதாஸ் சாது ஆட்டநாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர்நாயகி விருதையும் (மொத்தம் 293 ரன் மற்றும் 9 விக்கெட்) பெற்றனர்.

பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு எந்த வடிவிலான உலகக் கோப்பைபையும் இந்தியா வென்றதில்லை. இந்திய சீனியர் அணி 3 முறை இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறது. ஆனால் இந்திய இளம் படை, அறிமுக உலகக் கோப்பை தொடரிலேயே பட்டம் வென்று சாதித்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

உலகக் கோப்பையை கைப்பற்றி தேசத்துக்கு மகத்தான பெருமை சேர்த்துள்ள இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அத்துடன் வெற்றியை கொண்டாடும் வகையில் வருகிற 1-ந்தேதி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி 20 ஓவர் போட்டியை நேரில் பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்