டி20 உலகக்கோப்பை: ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்த ஜோசுவா லிட்டில்
|டி20 உலகக்கோப்பையில் தற்போது வரை 6 வீரர்கள் மட்டுமே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
அடிலெய்டு,
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் இன்று நடந்த முதல் போட்டியில் அயர்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இருந்தது.
இந்த போட்டியில் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். 19-வது ஓவரில் வில்லியம்சன் (61 ரன்) நீசம் (0), சான்ட்னெர் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்து அவர் ஹாட்ரிக் சாதனை படைத்தார். இது இந்த உலக கோப்பையில் இரண்டாவது ஹாட்ரிக் ஆகும்.
ஏற்கனவே முதல் சுற்றில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரக சுழற்பந்து வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 2-வது அயர்லாந்து வீரர் ஜோஷ்வா லிட்டில் ஆவார். ஒட்டு மொத்தமாக தற்போது உலகக்கோப்பையில் 6 வீரர்கள் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளனர். அவர்களின் பெயர் பின்வருமாறு:-
பிரட் லீ (ஆஸ்திரேலியா)- எதிரணி பங்களாதேஷ், கேப் டவுன், 2007
கர்டிஸ் கேம்பர் (அயர்லாந்து) எதிரணி நெதர்லாந்து, அபுதாபி, 2021
வனிந்து ஹசரங்கா (இலங்கை) எதிரணி தென்னாப்பிரிக்கா, ஷார்ஜா, 2021
ககிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா) எதிரணி இங்கிலாந்து, ஷார்ஜா, 2021
கார்த்திக் மெய்யப்பன் (யுஏஇ) எதிரணி இலங்கை, ஜீலாங், 2022
ஜோசுவா லிட்டில் (அயர்லாந்து) எதிரணி நியூசிலாந்து, அடிலெய்டு, 2022