ஜோ ரூட் - விராட் கோலி இருவரில் யார் சிறந்தவர்..? - தினேஷ் கார்த்திக் தேர்வு
|விராட் கோலியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் சிறந்தவர் என்று மைக்கேல் வாகன் சமீபத்தில் பாராட்டினார்.
புதுடெல்லி,
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் 12000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதனால் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய பேப் 4 வீரர்களை முந்திக் கொண்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஆளாக 10000 ரன்களை கடந்து அசத்தி வருகிறார். அதே போல 34 சதங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.
அதனால் விராட் கோலியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் சிறந்தவர் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்தில் பாராட்டினார். அத்துடன் சச்சின் டெண்டுல்கரை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக விரைவில் ஜோ ரூட் உலக சாதனை படைப்பார் என்று நம்புவதாகவும் மைக்கேல் வாகன் உறுதியான கணிப்பை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் விராட் கோலியை விட ஜோ ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இருப்பினும் அழுத்தமான சூழ்நிலைகள் அல்லது பெரிய போட்டிகளில் தரமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதில் விராட் கோலி முன்னிலையில் இருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். எனவே தம்மைப் பொறுத்த வரை விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசியது பின்வருமாறு:- "ஜோ ரூட் சிறந்த பேட்ஸ்மேன் என்று எண்கள் சொல்லும். ஆனால் என்னுடைய இதயம் விராட் கோலியை சொல்கிறது. உண்மையில் விராட் கோலி கடந்த ஒரு தசாப்தமாக தொடர்ந்து அசத்தி வருகிறார். அவர் எப்போதும் பெரிய தருணங்கள் மற்றும் பெரிய தொடர்களில் சிறப்பாக செயல்படுவதை விரும்புவார் என்பது எனக்குத் தெரியும். எனவே யாராவது என்னுடைய வாழ்க்கை முழுவதும் விளையாடக்கூடிய ஒரு பேட்டிங் பார்ட்னரை தேர்வு செய்யுமாறு கேட்டால் நான் விராட் கோலியை தேர்ந்தெடுப்பேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறினார்.