< Back
கிரிக்கெட்
அடுத்த டி20 கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ஜெய்ஷா

image courtesy:PTI

கிரிக்கெட்

அடுத்த டி20 கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ஜெய்ஷா

தினத்தந்தி
|
1 July 2024 1:52 PM IST

இந்தியாவின் அடுத்த தலைமை பயிற்சியாளர் மற்றும் டி20 கேப்டன் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

பார்படாஸ்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது.

வெற்றி வாகை சூடியதும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்தார். அவரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இவர்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் நேற்று ஓய்வை அறிவித்தார். இவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட், ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. தனது பயணத்தை வெற்றியுடன் முடித்துள்ளார். மேற்கொண்டு தொடர அவர் விரும்பவில்லை.

இதனால் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் மற்றும் டி20 கேப்டன் யார்? என்பது குறித்த ஆவல் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் அடுத்த பயிற்சியாளர் மற்றும் டி20 கேப்டன் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த கேப்டனாக பாண்ட்யா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

"பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு நியமனம் விரைவில் செய்யப்படும். அதற்கு கமிட்டி இன்டர்வியூ செய்து 2 பெயர்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்கள். இங்கிருந்து மும்பைக்கு சென்றதும் அதைப்பற்றி முடிவெடுக்க உள்ளோம். அடுத்த கேப்டன் யார்? என்பதை தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள். அது பற்றி தேர்வுக் குழுவுடன் நாங்கள் விவாதிக்க உள்ளோம்.

ஹர்திக் பாண்ட்யா பற்றி நீங்கள் கேட்டீர்கள். அவருடைய பார்ம் பற்றி நிறைய கேள்விகள் இருந்தன. ஆனால் தேர்வுக் குழுவினர் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். அதை அவர் நிரூபித்துள்ளார். 3 நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெற்றதிலிருந்தே இந்தியா டி20 கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்