< Back
கிரிக்கெட்
ஜாம்பவான் டான் பிராட்மேனை விட ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் - ஆகாஷ் சோப்ரா
கிரிக்கெட்

ஜாம்பவான் டான் பிராட்மேனை விட ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் - ஆகாஷ் சோப்ரா

தினத்தந்தி
|
3 Feb 2024 2:26 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இளம் நட்சத்திர வீரர் 179 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் அஸ்வின் 20 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து குல்தீப் யாதவ் களம் இறங்கினார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 277 பந்துகளில் 201 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 18 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் 209 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து குல்தீப் யாதவுடன் ஜஸ்ப்ரீத் பும்ரா ஜோடி சேர்ந்தார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில் டெஸ்ட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் அரை சதத்தை சதமாக மாற்றுவதில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை விட ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;-

"ஜெய்ஸ்வால் பேட்டில் இருந்து மிகவும் அற்புதமான செயல்பாடு வந்துள்ளது. இந்த குழந்தை எவ்வளவு அழகாக பேட்டிங் செய்தது. ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக மட்டுமே அவர் தொடர்ந்து பந்துகளை அடிக்காமல் விட்டார். அவர் ஆண்டர்சனின் நல்ல பந்து வீச்சுக்கு நிறைய மரியாதை கொடுக்கிறார். ஆனால் சுழல், வந்தபோது முதல் ஓவரிலேயே அவர் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். அதன்பின் அவர் தன்னை ஸ்பெஷல் பிளேயர் என்பதை காண்பித்தார். முதல் தர கிரிக்கெட்டில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த வீரர்களில் அரை சதத்தை சதமாக மாற்றுவதில் அவர் ஜாம்பவான் டான் பிராட்மேனை விட முன்னிலையில் இருக்கிறார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்