< Back
கிரிக்கெட்
சச்சின் 10 வருடங்களில் செய்ததை ஜெய்ஸ்வால் 1 வருடத்திலேயே செய்துவிட்டார் - பார்த்தீவ் படேல் பாராட்டு
கிரிக்கெட்

சச்சின் 10 வருடங்களில் செய்ததை ஜெய்ஸ்வால் 1 வருடத்திலேயே செய்துவிட்டார் - பார்த்தீவ் படேல் பாராட்டு

தினத்தந்தி
|
4 Feb 2024 2:49 PM IST

சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடிக்க 10 வருடங்கள் எடுத்துக்கொண்டதாக முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இழந்து, 396 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 209 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர் மற்றும் ரெஹன் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 55.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 76 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடிக்க 10 வருடங்கள் எடுத்துக்கொண்டதாக முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த வருடம் அறிமுகமான ஜெய்ஸ்வால் இந்த வருடம் இரட்டை சதமடித்துள்ளதாக பாராட்டும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"ஜெய்ஸ்வால் வான்கடே மைதானத்தில் ஜாம்பவான் வீரர்களுக்கு ரசிகர்கள் கொடுத்த கைதட்டல்களை பார்த்தவர். அதை அவரும் கேட்க விரும்பினார். நாளடைவில் அதே மைதானத்தில் ஐ.பி.எல். தொடரில் சதமடித்த அவர் அந்த கைதட்டல்களை பெற்றதை நாம் பார்த்தோம்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது வித்தியாசமான விளையாட்டு. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்துள்ள அவர் தற்போது இரட்டை சதமும் அடித்துள்ளார். பொதுவாக அனைவராலும் இரட்டை சதத்தை அடிக்கடி அடிக்க முடியாது. சச்சின் பாஜி கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிக்க 10 வருட காலம் எடுத்துக்கொண்டார். ஆனால் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன 1 வருடத்திலேயே இரட்டை சதம் அடித்துள்ளார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்