நிலுவை தொகையை செலுத்தாததால் ஜெய்ப்பூர் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு சீல் வைப்பு
|வாடகை நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்ற தவறியதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,
10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முதல் 17 நாட்களில் நடைபெறும் 21 ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி சென்னையில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும். முதல் கட்ட அட்டவணையின்படி ஜெய்ப்பூர் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (மார்ச் 24-ந் தேதி), ராஜஸ்தான் ராயல்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் (மார்ச் 28-ந் தேதி), ராஜஸ்தான் ராயல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஏப்.6-ந் தேதி) அணிகள் மோதும் ஆட்டங்கள் நடைபெறுகிறது.
ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஜெய்ப்பூர் சவாய் மான் ஸ்டேடியம், அங்குள்ள அலுவலகம் மற்றும் அகாடமிக்கு ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். வாடகை நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் நிறைவேற்ற தவறியதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் செயலாளர் சோஹன் ராம் சவுத்ரி கூறுகையில், 'எங்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த நிபந்தனைகளின் படி ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் நடந்து கொள்ளவில்லை. அத்துடன் நீண்ட நாட்களாக செலுத்தப்படாமல் இருக்கும் நிலுவை தொகையையும் வழங்கவில்லை. இதனால் ஸ்டேடியத்தை மாநில ஸ்போர்ட்ஸ் கவுன்சிலிடம் திருப்பி ஒப்படைக்குமாறு பலமுறை நோட்டீசு அனுப்பினோம். ஆனால் அதற்கு அவர்கள் பதில் எதுவும் அளிக்கவில்லை. எனவே ஸ்டேடியம் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஸ்டேடியம் எங்கள் வசம் வந்து இருக்கிறது. ஐ.பி.எல். மற்றும் சர்வதேச, தேசிய போட்டிகள் இங்கு தங்கு தடையின்றி நடைபெறும். விளையாட்டு வீரர்களுக்கு மைதானத்தில் உள்ள எல்லா வசதிகளும் கிடைக்கும்' என்றார்.
'எங்களுக்கு போதிய காலஅவகாசம் வழங்கப்படாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் அரசியலை கலப்பது தவறானதாகும். வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என்று ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் வைபவ் கெலாட் தெரிவித்தார்.