உலக கோப்பையில் ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு - ஜெயவர்தனே
|உலக கோப்பையில் ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறியுள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் விளையாடியபோது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். காயம் அதிகரித்ததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
அதன் பின்னர் டி20 உலக கோப்பை அணி அறிவிக்கப்பட்ட போது அவர் காயத்தில் இருந்து மீளாததால் அவரது பெயர் இடம் பெறவில்லை. டி20 உலக கோப்பை அணியில் ஜடேஜா இல்லாதது குறித்து ஐசிசி ரிவ்யூ நிகழ்ச்சியில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறியதாவது,
5வது இடத்தில் ஜடேஜா மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரும் பாண்டியாவும் சிறந்த ஆல்ரவுண்டர்கள். அவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது. அவர் இருந்த போது அணியின் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக இருந்தது.
ஜடேஜா காயத்தால் விலகிய பின்னர் அணியில் இடது கை ஆட்டக்காரர் வேண்டும் என்பதாலே தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை அணி 4வது அல்லது 5வது வரிசையில் ஆட தேர்வு செய்தது.
உலக கோப்பையில் இந்திய அணி 4 அல்லது 5வது வரிசையில் யாரை ஆட வைக்கலாம் என தேர்வு செய்ய வேண்டும். ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு, அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல நிலையில் இருந்தார் அவர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பு எனக் கூறினார்.