வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்; கபில்தேவின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜடேஜா...!
|வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
பிரிட்ஜ்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 115 ரன் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்தில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதாவது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வேதேச ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் பந்துவீச்சாளராக இருந்த கபில் தேவை பின்னுக்கு தள்ளி தற்போது ஜடேஜா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதுவரை 43 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் முதலிடத்திலும், 41 விக்கெட்டுகளுடன் அணில் கும்ப்ளே, ஜடேஜா ஆகியோர் இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது போட்டியில் ஜடேஜா எடுத்த 3 விக்கெட்டுகளோடு அந்த அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 44 விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.