4 வருடங்கள் நேரில் பார்த்துள்ளேன்... பெங்களூரு கோப்பையை வெல்லாததற்கு காரணம் இதுதான் - பார்த்தீவ் படேல்
|பெங்களூரு அணியில் நட்சத்திர வீரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.
பெங்களூரு,
இந்த வருடம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி 4-வது இடம் பிடித்தது. 2008 முதல் தொடர்ந்து விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இத்தனைக்கும் அந்த அணிக்கு ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் கேப்டனாக செயல்பட்டனர்.
அவர்களது தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன் போன்ற நிறைய மகத்தான வீரர்கள் விளையாடினர். ஆனால் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. அந்த அணியின் இந்த தோல்விக்கு பல வல்லுனர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரு அணியில் நட்சத்திர வீரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார். அந்த வகையில் அனைத்து வீரர்களும் சமமாக நடத்தப்படாததாலேயே அந்த அணி தோல்வியை சந்தித்து வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-
"ஆர்சிபி அணிக்காக நான் 4 வருடங்கள் விளையாடியுள்ளேன். அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணியாகும். அதை நான் நேரில் பார்த்துள்ளேன். அங்கே அனைவரும் அணியாக இருக்க மாட்டார்கள். இதை அந்த அணியிலிருந்து வெளியே வரும் அனைவருமே சொல்வார்கள்.
ஏனெனில் நான் பெங்களூரு அணியில் இருந்தபோது அங்கே விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் தான் அனைத்துமாகும். அங்கே அவர்களுக்கு ஸ்பெஷல் முன்னுரிமை கொடுக்கப்படும். எனவே அங்கே அணி கலாச்சாரம் கிடையாது என்பதை அவர்கள் விளையாடுவதை பார்க்கும்போது தெளிவாக தெரியும். அதனாலேயே அவர்கள் கோப்பையை வெல்லவில்லை. இதுவே உண்மை" என்று கூறினார்.