இது நியாயமற்றது - டி20 உலகக்கோப்பை அட்டவணை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய இலங்கை வீரர்
|தங்களுடைய லீக் சுற்று போட்டிகளை ஐ.சி.சி வடிவமைத்த விதம் நியாயமற்றதாக இருப்பதாக மகேஷ் தீக்சனா கூறியுள்ளார்.
நியூயார்க்,
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இரவு நியூயார்க்கில் நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 78 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 80 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தத் தொடரில் தங்களுடைய லீக் சுற்று போட்டிகளை ஐ.சி.சி வடிவமைத்த விதம் நியாயமற்றதாக இருப்பதாக இலங்கை வீரர் மகேஷ் தீக்சனா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, 4 போட்டிகளை நாங்கள் 4 வெவ்வேறு மைதானங்களில் விளையாட உள்ளது நியாயமற்றது. நாங்கள் ப்ளோரிடா மற்றும் மியாமி நகரிலிருந்து விமானத்தை பிடிக்க 8 மணி நேரம் காத்திருந்தோம். இங்கிருந்து நாங்கள் இரவு 8 மணிக்கு செல்ல வேண்டும். ஆனால் விமானம் காலை 6:00 மணிக்கே உள்ளது.
இது எங்களுக்கு நியாயமற்றது. ஏனெனில் அதன் காரணமாக அங்குள்ள சூழ்நிலைகளுக்கு எங்களால் உட்பட முடியவில்லை. ஹோட்டலிலிருந்து மைதானத்திற்கு வர 1.40 மணி நேரம் தேவைப்படுகிறது. அதற்கு நாங்கள் காலை 5:00 மணிக்கு எழுந்து வர வேண்டியுள்ளது. இருப்பினும் களத்தில் விளையாடும் போது அது முக்கியமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி இலங்கை கேப்டன் ஹசரங்கா கூறும்போது, கடந்த சில நாட்களாக நாங்கள் கடினமான நேரத்தை சந்தித்தோம் என்பதை சொல்ல முடியாது. 4 போட்டிகள் 4 வெவ்வேறு மைதானங்களில் நடைபெறுவது கடினம். அதனால் சூழ்நிலைகளை தெரிந்து கொள்ள முடியவில்லை. அடுத்த போட்டி நடைபெறும் டல்லாஸ் மைதானத்தின் சூழ்நிலை எங்களுக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.