< Back
கிரிக்கெட்
இது ஐசிசி-யின் விதிகள்...புதிதாக நாங்கள் எதையும் செய்யவில்லை - ஹர்மன்ப்ரீத் கவுர்
கிரிக்கெட்

இது ஐசிசி-யின் விதிகள்...புதிதாக நாங்கள் எதையும் செய்யவில்லை - ஹர்மன்ப்ரீத் கவுர்

தினத்தந்தி
|
25 Sept 2022 8:12 AM IST

ஐசிசி விதிகளில் இல்லாத ஒன்றை செய்ததாக நான் நினைக்கவில்லை. என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. .இறுதியில் இந்திய அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 68 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இங்கிலாந்து அணி 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றியது.

39 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி ஒரு விக்கெட்டை வைத்துக்கொண்டு கடுமையான சூழலில் விளையாடிக்கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு கடைசி விக்கெட் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது.

தீப்தி ஷர்மா அந்த கடைசி விக்கெட்டை கிரிக்கெட்டின் புதிய விதிகளைபி பயன்படுத்தி அசால்ட்டாக கைப்பற்றினார்.

ஆட்டத்தின் 43-வது ஓவரின் 4வது பந்தை இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா வீசிய போது அந்த பந்தை ப்ரேயா டேவிஸ் எதிர்கொண்டார் .

எதிர் முனையில் நின்ற இங்கிலாந்து அணி வீராங்கனை சார்லீ டீன் நின்றார் .ஆனால் தீப்தி ஷர்மா பந்துவீசுவதற்குள் கிரீஸை தாண்டி பல அடிகள் நகர்ந்து முன்னே சென்றுவிட்டார் சார்லீ டீன் .

இதை பயன்படுத்திக்கொண்ட தீப்தி, பந்தை வீசாமல் ஸ்டம்ப்பில் அடித்து சார்லீ டீன்-ஐ அவுட் செய்தார்.இதனை தொடர்ந்து நடுவர் ரீவியூ செய்தபிறகு ஐசிசியின் புதிய கிரிக்கெட் விதிகளின்படி அவுட் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியா கடைசி விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் வெற்றிபெற்றது.

விறுவிறுப்பான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் ரன் அவுட்டால் தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணியை வேதனை அடைய வைத்தது.

இந்த நிலையில் இந்த ரன் அவுட் குறித்து பேசிய இந்திய அணியின்'கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியதாவது ;

இது விளையாட்டின் ஒரு பகுதி. நாங்கள் புதிதாக ஒன்றைச் செய்ததாக நான் நினைக்கவில்லை. இது ஐசிசியின் விதிகள். அந்த வாய்ப்புகளை நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ளலாம், அது உங்கள் விழிப்புணர்வைக் காட்டுகிறது என்று நான் உணர்கிறேன்"

நான் எங்கள் வீராங்கனையை (தீப்தி ஷர்மா) ஆதரிப்பேன். ஐசிசி விதிகளில் இல்லாத ஒன்றை செய்ததாக நான் நினைக்கவில்லை. நாள் முடிவில், ஒரு வெற்றி , அதை நீங்கள் அனுபவிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

இந்த ரன் அவுட் குறித்து சமூக வலைதளங்களில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி கிரிக்கெட் ரசிர்கள் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்