< Back
கிரிக்கெட்
ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட் வீழ்த்தியது பெருமை அளிக்கிறது - டிரென்ட் பவுல்ட் மகிழ்ச்சி
கிரிக்கெட்

'ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட் வீழ்த்தியது பெருமை அளிக்கிறது' - டிரென்ட் பவுல்ட் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
15 Oct 2023 1:57 AM IST

ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட் வீழ்த்தியது பெருமை அளிப்பதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் ஓவரில் முதல் பந்தில் லிட்டான் தாஸ் விக்கெட்டை வீழ்த்திய நியூசிலாந்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 38-வது ஓவரில் தவ்ஹித் ஹிரிடாய் விக்கெட்டை கைப்பற்றினார். இது சர்வதேச ஒருநாள் போட்டியில் டிரென்ட் பவுல்ட் சாய்த்த 200-வது விக்கெட்டாகும். இந்த மைல்கல்லை அவர் தனது 107-வது ஆட்டத்தில் எட்டினார். இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக இந்த மைல்கல்லை அடைந்த 3-வது வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் அளித்த பேட்டியில், 'இந்த போட்டி தொடருக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வெவ்வேறு விதமான ஆடுகளங்களில் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடுவது என்பது சவாலான விஷயமாகும். இதுவரை எங்கள் வீரர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பந்து வீச்சில் நாங்கள் பேசியபடி திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். பேட்டிங்கும் நன்றாக போய் கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய ஆட்டங்கள் வர இருக்கிறது. நாங்கள் முதல் 3 ஆட்டங்களில் மூன்றிலும் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருக்கிறோம்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி எனக்கு மிகவும் பிடித்தமானதாகும். ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுளை வீழ்த்தி இருப்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. இது கடின உழைப்பின் மூலம் வந்து இருக்கிறது. 200 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்று இருப்பது மிகுந்த உற்சாகமாக இருக்கிறது. வில்லியம்சன் களம் திரும்பி இருப்பது சிறப்பானதாகும். அவர் முக்கியமான வீரர். அவர் நல்ல ஷாட்கள் ஆடி எதிரணி பவுலர்களுக்கு நெருக்கடி அளித்ததுடன், தனது இன்னிங்ஸ் மூலம் எங்களது அழுத்தத்தை குறைத்தார்' என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்