< Back
கிரிக்கெட்
இது சகாப்தம் முடிந்த தருணமாகும் - ஓய்வு பெற்ற இந்திய வீரர்களை வாழ்த்திய டி வில்லியர்ஸ்
கிரிக்கெட்

இது சகாப்தம் முடிந்த தருணமாகும் - ஓய்வு பெற்ற இந்திய வீரர்களை வாழ்த்திய டி வில்லியர்ஸ்

தினத்தந்தி
|
4 July 2024 9:45 PM IST

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து இந்திய வீரர்களான ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஓய்வு பெற்றுள்ளனர்.

கேப்டவுன்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது.

வெற்றி வாகை சூடியதும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்தார். அவரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இவர்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வை அறிவித்தார். இவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட், ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த மூவருக்கும் அந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் மனதார பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். குறிப்பாக பைனலில் ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"இது இந்திய வீரர்களின் சகாப்தம் முடிந்த தருணமாகும். விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுடைய ஓய்வை அறிவித்துள்ளனர். எனவே அவர்கள் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் இந்திய வண்ணத்தில் விளையாடுவதை பார்க்க முடியாது. அதே சமயம் வெளியேறுவதற்கு இதை விட சிறந்த வழியும் இருக்க முடியாது. ஏனெனில் உலகக்கோப்பையை வென்ற நீங்கள் உலகின் உச்சத்தில் இருக்கிறீர்கள். எனவே அவர்களுடைய இந்த முடிவை நான் ஆதரிக்கிறேன். இருப்பினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர்களை நான் மிஸ் செய்வேன். ஆனால் வருங்காலத்தில் உலகக்கோப்பையில் விளையாடும் ஈடுபாடு இல்லையென்றால் இளம் வீரர்களுக்கு வழி விட இதுவே சரியான நேரம்.

இந்தியாவுக்காக கடந்த பல வருடங்களாக விராட் கோலி அற்புதமாக செயல்பட்டு வருகிறார். பெரிய தருணங்களில் அசத்தக்கூடிய அவர் மீண்டும் டி20 உலகக்கோப்பை பைனலில் தன்னை நிரூபித்துள்ளார். அங்கே சிறப்பாக விளையாடிய அவர் இந்தியா 176 ரன்கள் குவிக்க உதவி வெற்றிக்கு அடித்தளமிட்டார்.

இந்த தொடரில் ரோகித் சர்மா அபாரமாக செயல்பட்டார் என்று நினைக்கிறேன். அதே எனர்ஜி, உணர்ச்சியுடன் அவர் நல்ல மனிதராக செயல்பட்டதை நான் விரும்பினேன்.

ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டர். நிறைய கோப்பைகளை வென்றுள்ள அவர் எப்போதும் முக்கிய தருணத்தில் இருப்பார். களத்தில் நன்றாக செயல்படக்கூடிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடியதை நான் மகிழ்ச்சியுடன் பார்த்தேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்