அது பணத்தை வீணடிக்கும் செயலாகும் - ஐபிஎல் அணியின் நிர்வாகங்களுக்கு கவாஸ்கர் அட்வைஸ்
|மாநில வாரியங்கள் நடத்தும் டி20 தொடரிலிருந்து வரும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் அசத்துவதில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை,
அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மாநில வாரியங்கள் நடத்தும் டி20 தொடரிலிருந்து வரும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் அசத்துவதில்லை என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே மாநில டி20 தொடர்களை அடிப்படையாக வைத்து ஐபிஎல் நிர்வாகங்கள் கோடிக்கணக்கில் செலவழித்து வீரர்களை வாங்குவது பணத்தை வீணடிக்கும் செயல் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "அண்டர்-19 வீரர்கள் முதல் தர கிரிக்கெட்டில் தடுமாறுவதை நாம் பார்க்கிறோம். ஏனெனில் அங்கே ஜூனியர் தொடர்களை விட எதிரணிகளின் தரம் அதிகமாக இருக்கும். அதே போல மாநில டி20 தொடர்களில் அசத்தும் வீரர்கள் சயத் முஸ்தாக் அலி அல்லது ஐபிஎல் தொடரில் அசத்துவதில்லை. ஏனெனில் அதனுடைய தரம் முற்றிலும் வித்தியாசமானது.
அதனால் மாநில டி20 தொடர்களில் ஜொலிக்கும் வீரர்கள் மீது ஐபிஎல் அணிகள் கோடிகளை கொட்டுவது பணத்தை வீணடிக்கும் செயலாகும். விரைவில் தொடங்கும் துலீப் கோப்பையில் இந்தியாவின் அனைத்து சர்வதேச வீரர்களும் விளையாட உள்ளனர். அது கண்டிப்பாக உள்ளூரில் விளையாடும் பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தகுதியானவர்களா என்பதை தேர்வாளர்கள் தெரிந்து கொள்வதற்கான சிறந்த வழியாகும்" என்று கூறினார்.