'கடைசி விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பு வாய்ந்தது' ஸ்டூவர்ட் பிராட் நெகிழ்ச்சி
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கடைசி விக்கெட்டை வீழ்த்தியதை மிகச்சிறப்பாக உணர்ந்ததாக ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து வெற்றி
லண்டன் ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் 384 ரன்கள் இலக்கை நோக்கி கடைசி நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி மழை பாதிப்புக்கு இடையே 94.4 ஓவர்களில் 334 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் (60 ரன்), உஸ்மான் கவாஜா (72 ரன்), ஸ்டீவன் சுமித் (54 ரன்) அரைசதம் அடித்தும் பலன் இல்லை.
இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற ஆஸ்திரேலியாவின் சோகம் தொடருகிறது. என்றாலும் தங்கள் நாட்டில் நடந்த முந்தைய ஆஷஸ் தொடரை கைப்பற்றி இருந்ததால் அதன் அடிப்படையில் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்துக்கொண்டது.
இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 37 வயதான ஸ்டூவர்ட் பிராட் இந்த டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். அவர் வெற்றியை ருசித்த மனநிறைவோடு, மேலும் சில அரிய சாதனைகளை கிரிக்கெட் வரலாற்றில் அழுத்தமாக பதித்து விட்டு விடைபெற்றார்.
அரிய சாதனை படைத்த பிராட்
இந்த டெஸ்டில் பேட்டிங்கில் தான் எதிர்கொண்ட கடைசி பந்தில் (மிட்செல் ஸ்டார்க் ஓவர்) ஸ்டூவர்ட் பிராட் சிக்சர் அடித்தார். இதே போல் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் கடைசி இரு விக்கெட்டுகளான (டாட் மர்பி மற்றும் அலெக்ஸ் கேரி) இவரே சாய்த்தார். 146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தான் சந்தித்த கடைசி பந்தில் சிக்சர் மற்றும் தனது கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
ஸ்டூவர்ட் பிராட் இதுவரை 167 டெஸ்டில் விளையாடி 604 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 153 விக்கெட்டுகள் வீழ்த்தியதும் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 150-க்கு மேல் விக்கெட்டுகளை அறுவடை செய்த ஒரே பவுலர் இவர் தான்.
மேலும் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 6 பேட்ஸ்மேன்களை அதாவது டேவிட் வார்னர் (17 முறை), மைக்கேல் கிளார்க் (11), ஸ்டீவன் சுமித் (11), டிவில்லியர்ஸ் (10), டாம் லாதம் (10), ராஸ் டெய்லர் (10) ஆகியோரது விக்கெட்டுகளை 10 முறைக்கு மேல் வீழ்த்தியுள்ளார். வேறு யாரும் இச்சாதனையை செய்ததில்லை. அவருக்கு அடுத்தபடியாக 5 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை 10 முறைக்கு மேல் வீழ்த்திய பட்டியலில் 5 பவுலர்கள் வருகிறார்கள்.
உணர்வுபூர்வமான தருணங்களுக்கு மத்தியில் பேசிய ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில், 'கடைசி இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமான விஷயம். ரசிகர்களின் ஆதரவும், உற்சாக குரலும் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. 2 விக்கெட்டுடன் அணிக்கு பங்களிப்பு வழங்கியது சிறப்பு வாய்ந்தது. ஓய்வு முடிவை எடுக்கும் போது கடைசி பந்து எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். அந்த வகையில் எனது கடைசி பந்தில் விக்கெட்டை கைப்பற்றி ஆஷஸ் டெஸ்டில் வெற்றி கண்டது உண்மையிலேயே பிரமிப்பூட்டுகிறது. முழுமையான மகிழ்ச்சியோடு விடைபெறுகிறேன்' என்றார்.
மொயீன் அலியும் ஓய்வு
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் 36 வயதான மொயீன் அலி இரண்டு ஆண்டுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஆஷஸ் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து பிரதான சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் காயத்தால் விலகினார். இதனால் கேப்டன் பென் ஸ்டோக்சும், பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லமும் மொயீன் அலியை டெஸ்ட் ஓய்வில் இருந்து விடுபட்டு ஆஷஸ் தொடரில் விளையாடும்படி வற்புறுத்தினர். அவர்களது வேண்டுகோளை ஏற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் கால்பதித்த மொயீன் அலி 2-வது இன்னிங்சில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுவே அவர் விளையாடிய கடைசி டெஸ்டாகும். இத்துடன் டெஸ்டில் இருந்து மீண்டும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
நடப்பு ஆஷஸ் தொடரில் 4 டெஸ்டில் ஆடி 180 ரன்களும், 9 விக்கெட்டும் எடுத்தார். ஒட்டுமொத்தத்தில் 68 டெஸ்டில் விளையாடி 5 சதம் உள்பட 3,094 ரன்களுடன், 204 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இனி ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.