அவருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்காதது என் தவறுதான் - பட்லர் பேட்டி
|டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கயானா,
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 103 ரன்களில் சுருண்டது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின் இங்கிலாந்து கேப்டன் பட்லர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்திய அணியை நாங்கள் இந்த போட்டியில் கூடுதலாக 20 முதல் 25 ரன்கள் அடிக்க விட்டு விட்டோம். சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் மொயின் அலிக்கு ஒரு ஓவரை கூட நான் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் நிச்சயம் போட்டியில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். மொயின் அலிக்கு பந்து வீச வாய்ப்பு வழங்காதது என் தவறு தான்.
இந்திய அணி இந்த மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. எங்களை விட அவர்கள் அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை பெற்று இருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு இந்திய அணி தகுதியானது தான். இவ்வாறு அவர் கூறினார்.