இரட்டை சதமடிப்பதற்கான உத்வேகத்தை அவர்கள்தான் கொடுத்தார்கள் - ஜெய்ஸ்வால்
|இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
ராஜ்கோட்,
ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டக்கெட் சதமடித்து 153 ரன்கள் எடுக்க இந்தியா அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் 126 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதம் (214), சுப்மன் கில் 91 ரன்கள், சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 557 என்ற மெகா இலக்கை இங்கிலாந்து சேசிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து 122 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்நிலையில் முதல் இன்னிங்சில் 33/3 என தடுமாறியபோது சதமடித்து இந்தியாவை காப்பாற்றிய ரோகித் மற்றும் ஜடேஜாதான் 2-வது இன்னிங்சில் தாம் இரட்டை சதமடிப்பதற்கான உத்வேகத்தை கொடுத்ததாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;-
"நான் நன்கு செட்டிலாகும்போது பெரிய ரன்கள் குவிக்க முயற்சிக்கிறேன். எனவே செட்டிலாகும்போது நான் நீண்ட நேரம் விளையாட முயற்சிக்கிறேன். ஆரம்பத்தில் எனக்கு ரன்கள் வராததால் பவுலர்களை பார்த்து விளையாடினேன். பின்னர் ரன்கள் வர ஆரம்பித்தபோது என்னுடைய திட்டங்களை பின்பற்றி அடித்தேன்.
கொஞ்ச நேரத்திற்கு பின் முதுகில் வலி ஏற்பட்டது. அப்போதும் நான் அவுட்டாகி செல்ல விரும்பவில்லை. எனவே மீண்டும் விளையாட வந்தபோது கடைசி வரை போட்டியை எடுத்துச் செல்ல விரும்பினேன். அணிக்கு நான் நல்ல துவக்கத்தை கொடுப்பது வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவேன். குறிப்பாக ரோகித் மற்றும் ஜடேஜா பாய் முதல் இன்னிங்சில் விளையாடியது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது" என்று கூறினார்.